வேதத்தில் உள்ள உடன்படிக்கைகள்

மனிதனுக்கும் ஆவிக்கும் இடையிலான எந்த ஒரு தொடர்பும் உடன்படிக்கையின் மூலமே செய்யப்படுகிறது

இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை (கர்மா)

ஏதெனின் உடன்படிக்கை

ஆதி 1:26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

29. பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;

30. பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.

நோவாவின் உடன்படிக்கை

ஆதி 8:15 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:

16. நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள்.

20. அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.

21. சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.

22. பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

ஆதி 9:1. பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.

2. உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.

3. நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.

4. மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.

5. உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.

6. மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.

7. நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்.

8. பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி:

9. நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,

10. உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள் பரியந்தம், பறவைகளோடும், நாட்டுமிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டுமிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.

11. இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.

ஆபிரகாமின் உடன்படிக்கை

ஆபிரகாமின் உடன்படிக்கை பற்றிய அறிவு இன்று நமக்கு முக்கியமானது. ஏனென்றால், சிலுவையின் புதிய உடன்படிக்கை மூலம், இயேசு நம்மை ஆபிரகாமின் உடன்படிக்கை மற்றும் ஆபிரகாமின் வாக்குத்தத்தங்களுடன் இணைக்கிறார்.

ஆதி 12:1 கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.

2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

 3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

4. கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.

ஆதி 15:1 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.

2. அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.

3. பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.

4. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி,

5. அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.

6. அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.

7. பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார்.

பலிபீடம் கட்டுதல்

8. அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான்.

9. அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார்.

10. அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை.

11. பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான்.

12. சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது.

13. அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.

14. இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.

15. நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்.

16. நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.

17. சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றின.

18.அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்

 19. கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,

20. ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,

21. எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.

ஆதி 17:1 ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.

2. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

3. அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி:

4. நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.

5. இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.

6. உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.

7.  உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

8. நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.

9. பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.

10. எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்;

11. உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

12. உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.

13. உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும், விருத்தசேதனம்பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது.

14. நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.

15. பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.

16. நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.

17. அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,

18. இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினான்.

19. அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

20. இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.

21. வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார்.

22. தேவன் ஆபிரகாமோடே பேசி முடிந்த பின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார்.

23. அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம்பண்ணினான்.

24. ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.

25. அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.

26. ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.

27. வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.

ஆதி 22:1  இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.

2. அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

3. ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

4. மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான்.

5. அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான்.

6. ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள்.

7. அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்.

8. அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய்,

9. தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான்.

10. பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்.

11. அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.

12. அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.

13. ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.

14. ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

15. கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு:

16. நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்;

17. நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,

18. நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

ஆபிரகாமின் உடன்படிக்கை ஈசாக்குடன் புதுப்பிக்கப்பட்டது

ஆதி 26:22 பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.

23. அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான்.

24. அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

25. அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்.

26. அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள்.

27. அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான்.

28. அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்.

29. நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள்.

ஆபிரகாமின் உடன்படிக்கை யாக்கோபுடன் புதுப்பிக்கப்பட்டது

ஆதி 35:9 யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ஆசீர்வதித்து:

10. இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்.

11. பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிடத்திலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள்.

12. நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி,

13. தேவன் அவனோடே பேசின ஸ்தலத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப் போனார்.

14. அப்பொழுது யாக்கோபு தன்னோடே அவர் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான்.

15. தேவன் தன்னோடே பேசின அந்த ஸ்தலத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பேரிட்டான்.

1 நாளா 16: 14 அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.

15. ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,

16. அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள்.

17. அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:

18. உங்கள் சுதந்தரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

19. அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத்தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.

20. அவர்கள் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.

21. அவர்களை யொடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்துகொண்டு:

22. நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.

ஆபிரகாமின் உடன்படிக்கை இன்று நம்முடன் புதுப்பிக்கப்பட்டது

கலா 3:6 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

7. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.

8. மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.

9. அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

13. மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

14. ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.

ஆபிரகாமின் உடன்படிக்கை மூலம் நமக்கு கிடைத்த வாக்குத்தத்தத்தை மோசேயின் நியாயப்பிரமாணத்தினால் அவமாக்க முடியவில்லை

கலா 3: 17. ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது.

18. அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.

கிறிஸ்துவின் மூலம் ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்

26.  நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.

27. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

28. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

29. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்.

மோசேயின் உடன்படிக்கை  (மோசேயின் மூலம் மக்களுடன் உடன்படிக்கை)

பத்து கட்டளைகள் மற்றும் 613 கட்டளைகள்,  மோசேயின் சட்டங்களை இது உள்ளடக்கியது. யாத்திராகமம் 19-24 அதிகாரங்களில் நீங்கள் படிக்கலாம்.

 யாத் 19:1. இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.

2. அவர்கள் ரெவிதீமிலிருந்து பிரயாணம் புறப்பட்டு, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்து, அந்த வனாந்தரத்தில் பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேலர் அங்கே மலைக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.

3. மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக் கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,

4. நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.

5. இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.

6. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டிய வார்த்தைகள் என்றார்.

7. மோசே வந்து ஜனங்களின் மூப்பரை அழைப்பித்து,கர்த்தர்தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.

8. அதற்கு ஜனங்கள் எல்லாரும் ஏகமாய், கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தரிடத்தில் தெரிவித்தான்.

9. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான்.

மோசேயின் உடன்படிக்கையை முத்திரை போடுதல்

யாத் 24:1. பின்பு அவர் மோசேயை நோக்கி: நீயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பரில் எழுபதுபேரும் கர்த்தரிடத்தில் ஏறிவந்து, தூரத்திலிருந்து பணிந்துகொள்ளுங்கள்.

2. மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம்; அவர்கள் சமீபித்து வரலாகாது; ஜனங்கள் அவனோடேகூட ஏறிவரவேண்டாம் என்றார்.

3. மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான். அப்பொழுது ஜனங்களெல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.

4. மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்.

5. இஸ்ரவேல் புத்திரரின் வாலிபரை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள்.

6. அப்பொழுது மோசே அந்த இரத்தத்தில் பாதி எடுத்து, பாத்திரங்களில் வார்த்து, பாதி இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து,

7. உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காதுகேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.

8. அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான்.

ஓய்வு நாள் மூலம் உடன்படிக்கை

யாத் 31: 12. மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்:

13. நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.

14. ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

15. ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.

16. ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்.

17. அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.

இயேசு கிறிஸ்து மூலமாய் புதிய ஏற்பாட்டின் உடன்படிக்கை   

எபி 8:1. மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில்; பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலது பாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய்,

2. பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷராலல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.

3. ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான்; ஆதலால் செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று இவருக்கும் அவசியம் வேண்டியதாயிருக்கிறது.

4. பூமியிலே அவர் இருப்பாரானால் ஆசாரியராயிருக்கமாட்டார்; ஏனெனில், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே;

5. இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணுகையில் மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.

6. இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்.

7. அந்த முதலாம் உடன்படிக்கை பிழைத்திருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.

8. அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது.

9. அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்தநாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

10. அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.

11. அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை.

12. ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

13. புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.

எபி 9:11. கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,

12. வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

13. அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால்,

14. நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

15. ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.

மத்தியஸ்தரின் இறப்பு அவசியம்

16. ஏனென்றால், எங்கே மரணசாசனமுண்டோ, அங்கே அந்தச் சாசனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்.

17. எப்படியெனில், மரணமுண்டானபின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே.

18. அந்தப்படி, முதலாம் உடன்படிக்கையும் இரத்தமில்லாமல் பிரதிஷ்டைபண்ணப்படவில்லை.

19. எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து:

20. தேவன் உங்களுக்குக், கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்.

21. இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய சகல பணிமூட்டுகளிள்மேலும் இரத்தத்தைத் தெளித்தான்.

22. நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.

23. அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.

27. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

28. கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.

பழைய உடன்படிக்கைக்கும் புது உடன்படிக்கைக்கும் உள்ள வேறுபாடு

எபி 12:18. அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும்,

19. எக்காள முழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள்.

20. ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள்.

21. மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது.

22. நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,

23. பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,

24. புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.

2கொரி 3:4-6

எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது

4. நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம்.

5. எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.

6. புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.

புது உடன்படிக்கையின் மகிமை

7. எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.

8. ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?

9. ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.

10. இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல.

11. அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.

14. அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.

15. மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.

16. அவர்கள்கர்த்தரிடத்தில்மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம்.

17. கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.

18. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.

இயேசுகிறிஸ்துவின் மூலமாக, புதிய உடன்படிக்கை நம்மை ஆபிரகாமின் விசுவாச உடன்படிக்கையுடன் மீண்டும் இணைக்கிறது

விருத்தசேதனத்திற்கும் புதுஉடன்படிக்கைக்கும் உள்ள வேறுபாடு

ரோம 2:25. நீ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாயிற்றே.

26. மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா?

27. சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா?

28. ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.

29. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.

மத் 5:17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

19. ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.

20. வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

பழைய ஏற்பாடு வரப்போகிற புது உடன்படிக்கையை பற்றி தீர்க்கதரிசனம் உரைக்கிறது 

எரே 31:27.  இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் மனுஷவித்தினாலும், மிருகவித்தினாலும் விதைப்பேன்.

28. அப்பொழுது நான் பிடுங்கவும் இடிக்கவும் நிர்மூலமாக்கவும் அழிக்கவும் தீங்குசெய்யவும் அவர்கள்பேரில் எப்படி ஜாக்கிரதையாயிருந்தேனோ, அப்படியே கட்டவும் நாட்டவும் அவர்கள் பேரில் ஜாக்கிரதையாயிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

29. பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.

30. அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.

31. இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்.

32. நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

33. அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

34. இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.

ஏசா 59:21.  உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

யோவே 2:28. அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.

29. ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.

பரிசுத்த திருவிருந்து என்பது புது உடன்படிக்கையின் மறுசீரமைப்பு :

மத் 26:27. பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;

28. இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

1கொரி 11:25 போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

26. ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

27. இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.

28. எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.

29. என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான்.

Related Quiz Articles