தீர்க்கதரிசிகள் மற்றும் ராஜாக்கள்:

பகுதி-2:

2 சாமுவேல் 6:

உடன்படிக்கை பெட்டி எருசலேமுக்கு கொண்டுவரப்பட்டது:

1.பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி,
2. கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடையகர்த்தரின்நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய்,
3. தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும் அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.
4. அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான்.
5. தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம் தம்புரு மேளம் வீணை கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டுபோனார்கள்.
6. அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.
7. அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.
8. அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டான்.
9. தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி,
10. அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான்.
11. கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.
12. தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.
13. கர்த்தருடைய பெட்டியைச் சுமந்துபோகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.
14. தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.
15. அப்படியே தாவீதும், இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியை கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.
16. கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணிவழியாய்ப் பார்த்து, தாவீதுராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.
17. அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான்.
18. தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டபின்பு, சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே ஜனங்களை ஆசீர்வதித்து,
19. இஸ்ரவேலின் திரள்கூட்டமான ஸ்திரீ புருஷராகிய சகல ஜனங்களுக்கும், அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சரசத்தையும் பங்கிட்டான்; பிற்பாடு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போய்விட்டார்கள்.
20. தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்குமுன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.
21. அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: உன் தகப்பனைப்பார்க்கிலும், அவருடைய எல்லா வீட்டாரைப்பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்.
22. இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்; அப்படியே நீ சொன்ன பெண்களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன் என்றான்.
23. அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.

I நாளாகமம் 13 :

உடன்படிக்கைபெட்டியை மீண்டும் கொண்டு வருதல்:

1.தாவீது ஆயிரம்பேருக்குத் தலைவரோடும் நூறுபேருக்குத் தலைவரோடும் சகல அதிபதிகளோடும் ஆலோசனைபண்ணி,
2. இஸ்ரவேல் சபையையெல்லாம் நோக்கி: உங்களுக்குச் சம்மதியும் நம்முடைய தேவனாகியகர்த்தருக்குச் சித்தமுமாயிருந்தால், இஸ்ரவேலின் தேசங்களிலெல்லாம் இருக்கிற நம்முடைய மற்றச் சகோதரரும், அவர்களோடே தங்கள் வெளிநிலங்களில் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் நம்மோடே கூடும்படிக்கு நாம் சீக்கிரமாய் அவர்களிடத்துக்கு ஆளனுப்பி,
3. நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்துக்குக் கொண்டுவருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாதேபோனோம் என்றான்.
4. இந்தக் காரியம் சகல ஜனத்தின் பார்வைக்கும் செம்மையாயிருந்தபடியால், சபையார் எல்லாரும் அப்படியே செய்வோம் என்றார்கள்.
5. அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச்சேர்ந்த சீகோர் நதிதுவக்கி ஆமாத்தின் எல்லைமட்டுமுள்ள இஸ்ரவேலையெல்லாங்கூட்டி,
6. கேருபீன்களின் நடுவே வாசம்பண்ணுகிறகர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமுக்கடுத்த பாலாவிலிருந்து கொண்டுவரும்படிக்கு, அவனும் இஸ்ரவேலர் அனைவரும் அவ்விடத்திற்குப்போனார்கள்.
7. அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புதுரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள்.
8. தாவீதும் சகல இஸ்ரவேலரும் தங்கள் முழுப் பலத்தோடும் தேவனுக்குமுன்பாகச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள்.
9. அவர்கள் கீதோனின் களமட்டும் வந்தபோது, மாடுகள் இடறினபடியினால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.
10. அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன்கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.
11. அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டு,
12. அன்றையதினம் தேவனுக்குப்பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடத்துக்குக் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி,
13. பெட்டியைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத்ஏதோமின்வீட்டிலே சேர்த்தான்.
14. தேவனுடைய பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்றுமாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.

2 சாமுவேல் 7:

தேவன் தாவீதுக்கு கொடுத்த வாக்குத்தத்தம்:

1.கர்த்தர்ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது, அவன் தன் வீட்டிலே வாசமாயிருக்கையில்,
2. ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்.
3. அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான்.
4. அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
5. நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் வாசமாயிருக்கத்தக்க ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ?
6. நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும் உலாவினேன்.
7. நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரத்தையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுருமரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் புத்திரருக்குள் உலாவி வந்த எவ்விடத்திலாவது யாதொரு வார்த்தையைச் சொன்னதுண்டோ?
8. இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,
9. நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.
10. நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்வரையில் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கும்படி அவர்களை நாட்டினேன்.
11. உன்னுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் உன்னை நீங்கலாக்கி, இளைப்பாறவும் பண்ணினேன்; இப்போதும் கர்த்தர் உனக்கு வீட்டை உண்டுபண்ணுவார் என்பதைக் கர்த்தர் உனக்கு அறிவிக்கிறார்.
12. உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.
13. அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.
14. நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.
15. உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.
16. உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்கிறார் என்று சொல்லச்சொன்னார்.
17. நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லாத் தரிசனத்தின்படியும், தாவீதுக்குச் சொன்னான்.

தாவீதின் ஜெபம்:

18. அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?
19. கர்த்தராகிய ஆண்டவரே, இது இன்னும் உம்முடைய பார்வைக்குக் கொஞ்ச காரியமாயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற தேவரீர் உம்முடைய அடியானுடைய வீட்டைக்குறித்து, வெகுதூரமாயிருக்கும் காலத்துச்செய்தியை மனுஷர் முறைமையாய்ச் சொன்னீரே.
20. இனி தாவீது உம்மிடத்தில் சொல்லவேண்டியது என்ன? கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நீர் உமது அடியானை அறிவீர்.
21. உம்முடைய வாக்குத்தத்தத்தினிமித்தமும், உம்முடைய சித்தத்தின்படியேயும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் உமது அடியானுக்கு அறிவிக்கும்படிக்குத் தயவுசெய்தீர்.
22. ஆகையால் தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர் என்று விளங்குகிறது; நாங்கள் எங்கள் காதுகளாலே கேட்ட சகல காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத்தவிர வேறே தேவனும் இல்லை.
23. உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ? பூலோகத்து ஜாதிகளில் இந்த ஒரே ஜாதியைத் தேவன் தமக்கு ஜனமாக மீட்கிறதற்கும், தமக்குக் கீர்த்தி விளங்கப்பண்ணுகிறதற்கும் ஏற்பட்டாரே; தேவரீர் எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டுவந்த உம்முடைய ஜனத்திற்குமுன்பாகப் பயங்கரமான பெரிய காரியங்களை நடத்தி, உம்முடைய தேசத்திற்கும், அதிலிருந்த ஜாதிகளுக்கும், அவர்கள் தேவர்களுக்கும், உமது மகிமையை விளங்கச்செய்து,
24. உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலர் என்றைக்கும் உம்முடைய ஜனமாயிருப்பதற்கு, அவர்களைத் திடப்படுத்தி, கர்த்தராகிய நீர்தாமே அவர்களுக்குத் தேவனானீர்.
25. இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.
26. அப்படியே சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் தேவனானவர் என்று சொல்லி, உம்முடைய நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக; உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக.
27. உனக்கு வீடுகட்டுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானின் செவிக்கு வெளிப்படுத்தினீர்; ஆகையால் உம்மை நோக்கி இந்த விண்ணப்பத்தைச் செய்ய உமது அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது.
28. இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவரீர் உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களை வாக்குத்தத்தம்பண்ணினீர்.
29. இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.

I நாளாகமம் 15:

உடன்படிக்கை பெட்டி எருசலேமுக்கு கொண்டுவரப்பட்டது :

1. அவன் தனக்குத் தாவீதின் நகரத்தில் வீடுகளை உண்டாக்கி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப்போட்டான்.
2. பிற்பாடு தாவீது: லேவியர் ஒழிய, வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கலாகாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களைகர்த்தர்தெரிந்துகொண்டார் என்றான்.
3. அப்படி கர்த்தருடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் ஸ்தலத்திற்கு அதைக் கொண்டுவரும்படி தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
4. ஆரோனின் புத்திரரையும்,
5. லேவியராகிய கோகாத் புத்திரரில் பிரபுவாகிய ஊரியேலையும் அவன் சகோதரராகிய நூற்றிருபதுபேரையும்,
6. மெராரியின் புத்திரரில் பிரபுவாகிய அசாயாவையும், அவன் சகோதரராகிய இருநூற்றிருபதுபேரையும்,
7. கெர்சோன் புத்திரரில் பிரபுவாகிய யோவேலையும், அவன் சகோதரராகிய நூற்றுமுப்பதுபேரையும்,
8. எலிசாப்பான் புத்திரரில் பிரபுவாகிய செமாயாவையும், அவன் சகோதரராகிய இருநூறுபேரையும்,
9. எப்ரோன் புத்திரரில் பிரபுவாகிய, எலியேலையும், அவன் சகோதரராகிய எண்பதுபேரையும்,
10. ஊசியேல் புத்திரரில் பிரபுவாகிய அம்மினதாபையும், அவன் சகோதரராகிய நூற்றுப்பன்னிரண்டுபேரையும் தாவீது கூடிவரப்பண்ணினான்.
11. பின்பு தாவீது ஆசாரியராகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியராகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்து,
12. அவர்களை நோக்கி: லேவியரில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்கள் சகோதரரையும் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்.
13. முதலில் நீங்கள் அதைச் சுமக்காதபடியினாலும், நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடியே தேடாதேபோனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்றான்.
14. அப்படியே ஆசாரியரும் லேவியரும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியைக் கொண்டுவரத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டார்கள்.
15. பின்பு லேவி புத்திரர் கர்த்தருடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்தபிரகாரம் தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினாலே தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள்.
16. தாவீது லேவியரின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரராகிய பாடகரைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷமுண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டுமென்று சொன்னான்.
17. அப்படியே லேவியர் யோவேலின் குமாரனாகிய ஏமானையும், அவன் சகோதரரில் பெரகியாவின் குமாரனாகிய ஆசாப்பையும், மெராரியின் புத்திரரான தங்கள் சகோதரரில் குஷாயாவின் குமாரனாகிய ஏத்தானையும்,
18. இவர்களோடுங்கூட இரண்டாவது வரிசையாகத் தங்கள் சகோதரராகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஒபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளரையும் நிறுத்தினார்கள்.
19. பாடகராகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், பஞ்சலோகக் கைத்தாளங்களைத் தொனிக்கப்பண்ணிப் பாடினார்கள்.
20. சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருகளை வாசித்தார்கள்.
21. மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாய் வாசித்தார்கள்.
22. லேவியருக்குள்ளே கெனானியா என்பவன் சங்கீதத்தலைவனாயிருந்தான்; அவன் நிபுணனானபடியால், கீதவித்தையைப் படிப்பித்தான்.
23. பெரகியாவும் எல்க்கானாவும் பெட்டிக்கு முன்பாகக் காவல்காத்துவந்தார்கள்.
24. செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் என்னும் ஆசாரியர் தேவனுடைய பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதினார்கள்; ஓபேத் ஏதோமும், எகியாவும் பெட்டிக்கு வாசல் காவலாளராயிருந்தார்கள்.
25. இப்படித் தாவீதும், இஸ்ரவேலின் மூப்பரும், ஆயிரத்துச் சேர்வைக்காரரும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து மகிழ்ச்சியோடே கொண்டுவரப்போனார்கள்.
26. கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சுமக்கிற லேவியருக்கு தேவன் அநுக்கிரகம்பண்ணினபடியால், அவர்கள் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள்.
27. தாவீதும், பெட்டியைச் சுமக்கிற சகல லேவியரும், பாடகரும், பாடகரின் வேலையை விசாரிக்கிற தலைவனாகிய கெனானியாவும், மெல்லிய புடவையான சால்வைகளைத் தரித்திருந்தார்கள்; தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருந்தான்.
28. அப்படியே இஸ்ரவேலனைத்தும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் தொனியோடும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள்.
29. கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி தாவீதின் நகரமட்டும் வந்தபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணிவழியாய்ப் பார்த்து, தாவீதுராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன் இருதயத்திலே அவமதித்தாள்.

2 சாமுவேல் 11:

தாவீது மற்றும் பத்சேபாள்:

1.மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கைபோடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.
2. ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரியவதியாயிருந்தாள்.
3. அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள்.
4. அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள்.
5. அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்.
6. அப்பொழுது தாவீது: ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான்.
7. உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான்.
8. பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான்; உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.
9. ஆனாலும் உரியா தன் வீட்டிற்குப்போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூட படுத்துக்கொண்டிருந்தான்.
10. உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான்.
11. உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும் என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும், என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனோ? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்.
12. அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான்.
13. தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான்.
14. காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.
15. அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.
16. அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான்.
17. பட்டணத்து மனுஷர் புறப்பட்டுவந்து யோவாபோடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள்; ஏத்தியனாகிய உரியாவும் செத்தான்.
18. அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி,
19. தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தபோது,
20. ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டணத்திற்கு இத்தனை கிட்டப்போய் யுத்தம்பண்ணவேண்டியது என்ன? அலங்கத்தில் நின்று எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?
21. எருப்பேசேத்தின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை அலங்கத்திலிருந்து ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அவன்மேல் போட்டதினால் அல்லவோ அவன் செத்தான்; நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான்.
22. அந்த ஆள் போய், உட்பிரவேசித்து, யோவாப் தன்னிடத்தில் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து,
23. தாவீதைப் பார்த்து: அந்த மனுஷர் கைமிஞ்சி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்மட்டும் அவர்களைத் துரத்தினோம்.
24. அப்பொழுது வில்வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின்மேல் எய்ததினால், ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள்; உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான்.
25.அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடத்தில் போய், இந்தக் காரியத்தைப்பற்றி விசாரப்படவேண்டாம்; பட்டயம் ஒருவேளை ஒருவனையும், ஒருவேளை வேறொருவனையும் பட்சிக்கும்; நீ யுத்தத்தைப் பலக்கப்பண்ணி, பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனுக்குத் திடஞ்சொல் என்றான்.
26. தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள்.
27. துக்கநாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம்கர்த்தரின்பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது.

2 சாமுவேல் 12:

நாத்தான் தாவீதை கடிந்துகொள்கிறான்:

1. கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.
2. ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.
3. தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது.
4. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல்பண்ணுவித்தான் என்றான்.
5. அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
6. அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.
7. அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,
8. உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.
9. கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.
10. இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.
11. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.
12. நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்.
13. அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்.
14. ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப் போய்விட்டான்.
15. அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.
16. அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காக தேவனிடத்தில் பிரார்த்தனைபண்ணி, உபவாசித்து, உள்ளேபோய், இராமுழுதும் தரையிலே கிடந்தான்.
17. அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.
18. ஏழாம்நாளில், பிள்ளை செத்துப்போயிற்று. பிள்ளை செத்துப்போயிற்று என்று தாவீதின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவிக்க ஐயப்பட்டார்கள்; பிள்ளை உயிரோடிருக்கையில், நாம் அவரோடே பேசுகிறபோது, அவர் நம்முடைய சொற்கேட்கவில்லை; பிள்ளை செத்துப்போயிற்று என்று அவரோடே எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக வியாகுலப்படுவாரே என்று பேசிக்கொண்டார்கள்.
19. தாவீது தன் ஊழியக்காரர் இரகசியமாய்ப் பேசிக்கொள்ளுகிறதைக் கண்டு, பிள்ளை செத்துப்போயிற்று என்று அறிந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: பிள்ளை செத்துப்போயிற்றோ என்று கேட்டான்; செத்துப்போயிற்று என்றார்கள்.
20. அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து, ஸ்நானம்பண்ணி, எண்ணெய்பூசிக்கொண்டு, தன் வஸ்திரங்களை மாற்றி, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, பணிந்துகொண்டு, தன் வீட்டுக்குவந்து, போஜனம் கேட்டான்; அவன்முன்னே அதை வைத்தபோது புசித்தான்.
21. அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர்; பிள்ளை மரித்தபின்பு, எழுந்திருந்து அசனம்பண்ணுகிறீரே என்றார்கள்.
22. அதற்கு அவன்: பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன்.
23. அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்கவேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.
24. பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடே சயனித்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பேரிட்டான்; அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார்.
25. அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான்.
26. அதற்குள்ளே யோவாப் அம்மோன் புத்திரருடைய ரப்பா பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, ராஜதானியைப் பிடித்து,
27. தாவீதினிடத்தில் ஆள் அனுப்பி, நான் ரப்பாவின்மேல் யுத்தம்பண்ணி, தண்ணீர் ஓரமான பட்டணத்தைப் பிடித்துக்கொண்டேன்.
28. நான் பட்டணத்தைப் பிடிக்கிறதினால், என் பேர் வழங்காதபடிக்கு, நீர் மற்ற ஜனங்களைக் கூட்டிக்கொண்டுவந்து, பட்டணத்தை முற்றிக்கைபோட்டு, பிடிக்கவேண்டும் என்று சொல்லச் சொன்னான்.
29. அப்படியே தாவீது ஜனங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு, ரப்பாவுக்குப் போய், அதின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்தான்.
30. அவர்களுடைய ராஜாவின் தலைமேலிருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து நிறைபொன்னும், இரத்தினங்கள் பதித்ததுமாயிருந்தது; அது தாவீதினுடைய தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளையைக் கொண்டுபோனான்.
31. பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டுபோய் அவர்களை வாள்களுக்கும், இருப்புப் பாரைகளுக்கும், இருப்புக் கோடரிகளுக்கும் உட்படுத்தி, அவர்களைச் செங்கற்சூளையையும் கடக்கப்பண்ணினான்; இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து, தாவீது எல்லா ஜனத்தோடுங்கூட எருசலேமுக்குத் திரும்பினான்.

2 சாமுவேல் 15:

அப்சலோமின் சதி:

1. இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்.
2. மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால்,
3. அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது; ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.
4. பின்னும் அப்சலோம்: வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயஞ்செய்யும்படிக்கு, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான்.
5. எவனாகிலும் ஒருவன் அவனை வணங்கவரும்போது, அவன் தன் கையை நீட்டி அவனைத் தழுவி, முத்தஞ்செய்வான்.
6. இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்.
7. நாற்பது வருஷம் சென்றபின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி: நான் கர்த்தருக்குப் பண்ணின என் பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படிக்கு நான் போக உத்தரவுகொடும்.
8. கர்த்தர் என்னை எருசலேமுக்குத் திரும்பி வரப்பண்ணினால், கர்த்தருக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியானாகிய நான் சீரியாதேசத்தில் கேசூரிலே குடியிருக்கும்போது, பொருத்தனைபண்ணினேன் என்றான்.
9. அதற்கு ராஜா, சமாதானத்தோடே போ என்றான்; அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்குப் போனான்.
10. அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுகாரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.
11. எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறுபேர் அப்சலோமோடே கூடப்போனார்கள்; அவர்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் போனார்கள்.
12. அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்; அப்படியே கட்டுப்பாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள்.

தாவீது ஓடிப்போகிறார்:

13. அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதினிடத்தில் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைப் பற்றிப்போகிறது என்றான்.
14. அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் தீவிரித்து நம்மிடத்தில் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, நகரத்தைப் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணாதபடிக்குத் தீவிரமாய்ப் புறப்படுங்கள் என்றான்.
15. ராஜாவின் ஊழியக்காரர் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவாகிய எங்கள் ஆண்டவன் கட்டளையிடும் காரியத்தையெல்லாம் செய்ய உமது அடியாராகிய நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம் என்றார்கள்.
16. அப்படியே ராஜாவும் அவனுடைய வீட்டார் எல்லாரும் கால்நடையாய்ப் புறப்பட்டார்கள்; வீட்டைக்காக்க ராஜா மறுமனையாட்டிகளாகிய பத்து ஸ்திரீகளைப் பின்வைத்தான்.
17. ராஜாவும் சமஸ்த ஜனங்களும் கால்நடையாய்ப் புறப்பட்டு, சற்றுத்தூரம் போய், ஒரு இடத்திலே தரித்து நின்றார்கள்.
18. அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும், கிரேத்தியர் யாவரும், பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்துபோனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்த அறுநூறுபேராகிய கித்தியர் எல்லாரும் ராஜாவுக்குமுன்பாக நடந்தார்கள்.
19. அப்பொழுது ராஜா கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடனேகூட வருவானேன்? நீ திரும்பிப்போய், ராஜாவுடனேகூட இரு; நீ அந்நியதேசத்தான், நீ உன் இடத்திற்குத் திரும்பிப் போகலாம்.
20. நீ நேற்றுதானே வந்தாய்; இன்று நான் உன்னை எங்களோடே நடந்துவரும்படிக்கு அழைத்துக்கொண்டு போகலாமா? நான் போகக்கூடிய இடத்திற்குப் போகிறேன்; நீ உன் சகோதரரையும் அழைத்துக்கொண்டு திரும்பிப்போ; கிருபையும் உண்மையும் உன்னோடே இருப்பதாக என்றான்.
21. ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்றுகர்த்தருடையஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
22. அப்பொழுது தாவீது ஈத்தாயை நோக்கி: நடந்துவா என்றான்; அப்படியே கித்தியனாகிய ஈத்தாயும் அவனுடைய எல்லா மனுஷரும் அவனோடிருக்கிற எல்லாப் பிள்ளைகளும் நடந்துபோனார்கள்.
23. சகல ஜனங்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார் எல்லாரும் மகா சத்தமாய் அழுதார்கள்; ராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான்; ஜனங்கள் எல்லாரும் வனாந்தரத்திற்குப் போகிற வழியே நடந்துபோனார்கள்.
24. சாதோக்கும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை அவனோடேகூட இருந்து சுமக்கிற சகல லேவியரும் வந்து, தேவனுடைய பெட்டியை அங்கே வைத்தார்கள்; ஜனங்கள் எல்லாரும் நகரத்திலிருந்து கடந்துதீருமட்டும், அபியத்தார் திரும்பிப்போயிருந்தான்.
25. ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்.
26. அவர்: உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்.
27. பின்னும் ராஜா ஆசாரியனாகிய சாதோக்கை நோக்கி: நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? நீ சமாதானத்தோடே நகரத்திற்குத் திரும்பு; உன் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமாகிய உங்கள் குமாரர் இரண்டுபேரும் உங்களோடேகூடத் திரும்பிப் போகட்டும்.
28. எனக்கு அறிவிக்கிறதற்கு உங்களிடத்திலிருந்து செய்திவருமட்டும், நான் வனாந்தரத்தின் வெளிகளிலே தரித்திருப்பேன் என்றான்.
29. அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுபோய், அங்கே இருந்தார்கள்.
30. தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப்போனான்; அவனோடிருந்த சகல ஜனங்களும் முகத்தை மூடி அழுதுகொண்டு ஏறினார்கள்.
31. அப்சலோமோடே கட்டுப்பாடுபண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது: கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான்.
32. தாவீது மலையின் உச்சிமட்டும்வந்து, அங்கே தேவனைப் பணிந்துகொண்டபோது, இதோ, அற்கியனாகிய ஊசாய் தன் வஸ்திரத்தைக் கிழித்துக்கொண்டு, தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவனாய் அவனுக்கு எதிர்ப்பட்டான்.
33. தாவீது அவனைப் பார்த்து: நீ என்னோடேகூட நடந்துவந்தால் எனக்குப் பாரமாயிருப்பாய்.
34. நீ நகரத்திற்குத் திரும்பிப்போய், அப்சலோமை நோக்கி: ராஜாவே, உம்முடைய ஊழியக்காரனாயிருப்பேன்; முன்பு நான் உம்முடைய தகப்பனுக்கு ஊழியக்காரனாயிருந்தேன்; இப்போது நான் உமக்கு ஊழியக்காரன் என்றாயேயாகில், எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்குவாய்.
35. உன்னோடே அங்கே சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ராஜாவின் வீட்டிலே பிறக்கிற ஏதேது செய்தி உண்டோ, என்னென்ன கேள்விப்படுகிறாயோ, அதையெல்லாம் சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களுக்கு அறிவிப்பாய்.
36. அங்கே அவர்களோடே சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும், அவர்கள் இரண்டு குமாரரும் இருக்கிறார்கள்; நீங்கள் கேள்விப்படுகிற செய்தியையெல்லாம் அவர்கள்வசமாய் எனக்கு அனுப்புவீர்களாக என்றான்.
37. அப்படியே தாவீதின் சிநேகிதனாகிய ஊசாய் நகரத்திற்கு வந்தான்; அப்சலோமும் எருசலேமுக்கு வந்தான்.

2 சாமுவேல் 16:

அகித்தோப்பேல் மற்றும் ஊசாயின் ஆலோசனை:

15. அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷராகிய சகல ஜனங்களும் அவனோடேகூட அகித்தோப்பேலும் எருசலேமுக்கு வந்தார்கள்.
16. அற்கியனாகிய ஊசாய் என்னும் தாவீதின் சிநேகிதன் அப்சலோமிடத்தில் வந்தபோது, ஊசாய் அப்சலோமை நோக்கி: ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க என்றான்.
17. அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன் சிநேகிதன்மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ? உன் சிநேகிதனோடே நீ போகாதேபோனது என்ன என்று கேட்டான்.
18. அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி அப்படி அல்ல,கர்த்தரும்இந்த ஜனங்களும் இஸ்ரவேல் மனுஷரனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரையே நான் சேர்ந்து அவரோடே இருப்பேன்.
19. இதுவும் அல்லாமல், நான் யாரிடத்தில் சேவிப்பேன்? அவருடைய குமாரனிடத்தில் அல்லவா? உம்முடைய தகப்பனிடத்தில் எப்படி சேவித்தேனோ, அப்படியே உம்மிடத்திலும் சேவிப்பேன் என்றான்.
20.அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான்.
21. அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் பின்வைத்த அவருடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசியும், அப்பொழுது உம்முடைய தகப்பனுக்கு நாற்றமாய்ப்போனீர் என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லாருடைய கைகளும் பலக்கும் என்றான்.
22. அப்படியே அப்சலோமுக்கு உப்பரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்: அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான்.
23. அந்நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனையெல்லாம் தேவனுடைய வாக்கைப்போல இருந்தது, அப்படியே அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.

2 சாமுவேல் 17:

1. பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.
2. அவன் விடாய்த்தவனும் கை தளர்ந்தவனுமாயிருக்கையில், நான் அவனிடத்தில் போய், அவனைத் திடுக்கிடப்பண்ணுவேன்; அப்பொழுது அவனோடிருக்கும் ஜனங்களெல்லாரும் ஓடிப்போவதினால், நான் ராஜா ஒருவனைமாத்திரம் வெட்டி,
3. ஜனங்களையெல்லாம் உம்முடைய வசமாய்த் திரும்பப்பண்ணுவேன், இப்படிச்செய்ய நீர் வகைதேடினால், எல்லாரும் திரும்பினபின் ஜனங்கள் சமாதானத்தோடு இருப்பார்கள் என்றான்.
4. இந்த வார்த்தை அப்சலோமின் பார்வைக்கும் இஸ்ரவேலுடைய சகல மூப்பரின் பார்வைக்கும் நலமாய்த் தோன்றினது.
5. ஆகிலும் அப்சலோம்: அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிட்டு, அவன் வாய்மொழியையும் கேட்போம் என்றான்.
6. ஊசாய் அப்சலோமிடத்தில் வந்தபோது, அப்சலோம் அவனைப் பார்த்து: இந்தப்பிரகாரமாக அகிப்தோப்பேல் சொன்னான்; அவன் வார்த்தையின்படிசெய்வோமோ? அல்லவென்றால், நீ சொல் என்றான்
7. அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அகித்தோப்பேல் இந்த விசைசொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான்.
8. மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் என்றும், வெளியிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல மனமெரிகிறவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்; அவர் இராக்காலத்தில் ஜனங்களோடே தங்கமாட்டார்.
9. இதோ, அவர் இப்பொழுது ஒரு கெபியிலாவது, வேறே யாதோரிடத்திலாவது ஒளித்திருப்பார்; துவக்கத்திலேதானே நம்முடையவர்களில் சிலர் பட்டார்களேயானால், அதைக் கேட்கிற யாவரும் அப்சலோமைப் பின்செல்லுகிற ஜனங்களில் சங்காரம் உண்டாயிற்று என்பார்கள்.
10. அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கொத்த இருதயமுள்ள பலவானாயிருக்கிறவனுங்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள்.
11. ஆதலால் நான் சொல்லுகிற யோசனையாவது, தாண்முதல் பெயெர்செபாமட்டும் இருக்கிற கடற்கரை மணலத்தனை திரட்சியான இஸ்ரவேலர் எல்லாரும் உம்மண்டையில் கூட்டப்பட்டு, நீர்தானேகூட யுத்தத்திற்குப் போகவேண்டும்.
12. அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எவ்விடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம்; அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனுஷரிலும் ஒருவனும் அவருக்கு மீந்திருப்பதில்லை.
13. ஒரு பட்டணத்திற்குள் புகுந்தாரேயானால், இஸ்ரவேலர் எல்லாரும் அந்தப் பட்டணத்தின்மேல் கயிறுகளைப்போட்டு, அங்கே ஒரு பொடிக்கல்லும் காணப்படாதே போகுமட்டும், அதை இழுத்து ஆற்றிலே போடுவார்கள் என்றான்.
14. அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைப்பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்; இப்படி கர்த்தர் அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணும்பொருட்டு, அகித்தோப்பேலின் நல்லஆலோசனையை அபத்தமாக்குகிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்.
15. பின்பு ஊசாய், சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: இன்ன இன்னபடி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பருக்கும் ஆலோசனை சொன்னான்; நானோ இன்ன இன்னபடி ஆலோசனை சொன்னேன்.
16. இப்பொழுதும் நீங்கள் சீக்கிரமாய்த் தாவீதுக்கு அறிவிக்கும்படிக்குச் செய்தி அனுப்பி: நீர் இன்று இராத்திரி வனாந்தரத்தின் வெளிகளிலே தங்கவேண்டாம்; ராஜாவும் அவரோடிருக்கிற சகல ஜனங்களும் விழுங்கப்படாதபடிக்குத் தாமதம் இல்லாமல் அக்கரைப்படவேண்டும் என்று சொல்லச்சொல்லுங்கள் என்றான்.
17. யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் பிரவேசிக்கிறதினால் காணப்படாதபடிக்கு, இன்றோகேல் அண்டை நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீதுராஜாவுக்கு அதை அறிவிக்கப்போனார்கள்.
18. ஒரு பிள்ளையாண்டான் அவர்களைக் கண்டு, அப்சலோமுக்கு அறிவித்தான்; ஆகையால், அவர்கள் இருவரும் சீக்கிரமாய்ப் போய், பகூரிமிலிருக்கிற ஒரு மனுஷன் வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; அவன் முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது; அதில் இறங்கினார்கள்.
19. வீட்டுக்காரி ஒரு பாயை எடுத்து, கிணற்றுவாயின்மேல் விரித்து, காரியம் வெளிப்படாதபடிக்கு அதன்மேல் நொய்யைப் பரப்பிவைத்தாள்.
20. அப்சலோமின் சேவகர் அந்த ஸ்திரீயினிடத்தில் வீட்டிற்குள் வந்து: அகிமாசும் யோனத்தானும் எங்கே என்று கேட்டார்கள்; அவர்களுக்கு அந்த ஸ்திரீ: வாய்க்காலுக்கு அப்பாலே போய்விட்டார்கள் என்றாள்; இவர்கள் தேடிக்காணாதேபோய், எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
21. இவர்கள் போனபிற்பாடு, அவர்கள் கிணற்றிலிருந்து ஏறிவந்து, தாவீது ராஜாவுக்கு அறிவித்து, தாவீதை நோக்கி: சீக்கிரமாய் எழுந்து ஆற்றைக்கடந்துபோங்கள்; இன்னபடி அகித்தோப்பேல் உங்களுக்கு விரோதமாய் ஆலோசனை சொன்னான் என்றார்கள்.
22. அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல ஜனங்களும் எழுந்து யோர்தானைக் கடந்துபோனார்கள்; பொழுதுவிடிகிறதற்குள்ளாக யோர்தானைக்கடவாதவன் ஒருவனும் இல்லை.
23. அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

அப்சலோமின் இறப்பு:

24. தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோம் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்.
25. அப்சலோம், யோவாபுக்குப் பதிலாக அமாசாவை இராணுவத்தலைவனாக்கினான்; இந்த அமாசா, நாகாசின் குமாரத்தியும் செருயாவின் சகோதரியும் யோவாபின் அத்தையுமாகிய அபிகாயிலைப் படைத்த இஸ்ரவேலனாகிய எத்திரா என்னும் பேருள்ள ஒரு மனுஷனுடைய குமாரனாயிருந்தான்.
26. இஸ்ரவேல் ஜனங்களும் அப்சலோமும் கீலேயாத் தேசத்திலே பாளயமிறங்கினார்கள்.
27. தாவீது மக்னாயீமில் சேர்ந்தபோது, அம்மோன் புத்திரரின் தேசத்து ரப்பா பட்டணத்தானாகிய சோபி என்னும் நாகாசின் குமாரனும், லோதேபார் ஊரானான அம்மியேலின் குமாரன் மாகீரும், ரோகிலிம் ஊரானும் கீலேயாத்தியனுமாகிய பர்சிலாவும்,
28. மெத்தைகளையும், கலங்களையும், மண்பாண்டங்களையும், கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்த பயற்றையும் பெரும்பயற்றையும், சிறு பயற்றையும், வறுத்த சிறு பயற்றையும்,
29. தேனையும், வெண்ணெயையும், ஆடுகளையும், பால்கட்டிகளையும், தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனங்களுக்கும் சாப்பிடுகிறதற்குக் கொண்டுவந்தார்கள்; அந்த ஜனங்கள் வனாந்தரத்திலே பசியும் இளைப்பும் தவனமுமாயிருப்பார்கள் என்று இப்படிச் செய்தார்கள்.

2 சாமுவேல் 24:

தாவீது ஜனங்களைத் தொகையிடுகிறார்:

1. கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.
2. அப்படியே ராஜா தன்னோடிருக்கிற சேனாபதியாகிய யோவாபைப் பார்த்து: ஜனங்களின் இலக்கத்தை நான் அறியும்படிக்கு நீ தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேலரின் கோத்திரமெங்கும் சுற்றித்திரிந்து ஜனங்களைத் தொகையிடுங்கள் என்றான்.
3. அப்பொழுது யோவாப் ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும், நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்.
4. ஆகிலும் யோவாபும் இராணுவத்தலைவரும் சொன்ன வார்த்தை செல்லாதபடிக்கு, ராஜாவின் வார்த்தை பலத்தது; அப்படியே இஸ்ரவேல் ஜனங்களைத் தொகையிட, யோவாபும் இராணுவத்தலைவரும் ராஜாவைவிட்டு புறப்பட்டுப்போய்,
5. யோர்தானைக் கடந்து, காத் என்னும் ஆறுகளின் நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலதுபுறமான ஆரோவேரிலும் யாசேரிடத்திலும் பாளயமிறங்கி,
6. அங்கேயிருந்து கீலேயாத்திற்கும் தாதீம்ஒத்சிக்கும் போய், அங்கேயிருந்து தாண்யானுக்கும், சீதோனின் சுற்றுப்புறங்களுக்கும் போய்,
7. பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர் கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய்,
8. இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதமும் இருபதுநாளும் ஆனபிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள்.
9. யோவாப் ஜனத்தை இலக்கம்பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள்.
10. இவ்விதமாய் ஜனங்களை எண்ணினபின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும், நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.
11. தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:
12. நீ தாவீதினிடத்தில் போய், மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
13. அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்.
14. அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.
15. அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமேதொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்.
16. தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான்.
17. ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம்பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்.

தாவீது ஒரு பலிபீடத்தை கட்டுகிறார்:

18. அன்றையதினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலேகர்த்தருக்குஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.
19. காத்துடைய வார்த்தையின்படியே தாவீது கர்த்தர் கற்பித்த பிரகாரமாகப் போனான்.
20. அர்வனா ஏறிட்டுப்பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரரும் தன்னிடத்தில் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி,
21. ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்படக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு இந்தக் களத்தை உன் கையிலே கொள்ளவந்தேன் என்றான்.
22. அர்வனா தாவீதைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவன் இதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும் விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கிறது என்று சொல்லி,
23. அர்வனா ராஜயோக்கியமாய் அவை எல்லாவற்றையும் ராஜாவுக்குக் கொடுத்த பின்பு, அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மிடத்தில் கிருபையாயிருப்பாராக என்றான்.
24. ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான்.
25. அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார், இஸ்ரவேலின்மேல் இருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.

I நாளாகமம் 29:

26. இவ்விதமாய் ஈசாயின் குமாரனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்துக்கும் ராஜாவாயிருந்தான்.
27. அவன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பதுவருஷம்; எப்ரோனிலே ஏழுவருஷமும், எருசலேமிலே முப்பத்துமூன்று வருஷமும் ராஜாவாயிருந்தான்.
28. அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய் நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின், அவன் குமாரனாகிய சாலொமோன் அவன் ஸ்தானத்திலே அரசாண்டான்.
29. தாவீது ராஜாவினுடைய ஆதியோடந்தமான நடபடிகளும், அவன் அரசாண்ட விபரமும், அவனுடைய வல்லமையும், அவனுக்கும் இஸ்ரவேலுக்கும், அந்தந்த தேசங்களின் ராஜ்யங்கள் அனைத்துக்கும் நடந்த காலசம்பவங்களும்,
30. ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது.

I நாளாகமம் 21:

1. சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது.
2. அப்படியே தாவீது யோவாபையும், ஜனத்தின் சேர்வைக்காரரையும் நோக்கி: நீங்கள் போய், பெயெர்செபாதொடங்கித் தாண்மட்டும் இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்கள் இலக்கத்தை நான் அறியும்படிக்கு, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
3. அப்பொழுது யோவாப்: கர்த்தருடைய ஜனங்கள் இப்போது இருக்கிறதைப்பார்க்கிலும் நூறத்தனையாய் அவர் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் ராஜாவாகிய என் ஆண்டவனே, அவர்களெல்லாரும் என் ஆண்டவனின் சேவகரல்லவா? என் ஆண்டவன் இதை விசாரிப்பானேன்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது நடக்கவேண்டியது என்ன என்றான்.
4. யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலிட்டபடியினால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமுக்கு வந்து,
5. ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொருலட்சம்பேரும், யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து எழுபதினாயிரம்பேரும் இருந்தார்கள்.
6. ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால், லேவி பென்யமீன் கோத்திங்களிலுள்ளவர்களை அவர்களுடைய இலக்கத்திற்குட்பட எண்ணாதேபோனான்.
7. இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார்.
8. தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததினால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; வெகு புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.
9. அப்பொழுது கர்த்தர், தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசி,
10. நீ தாவீதினிடத்தில் போய்: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச்செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
11. அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி:
12. மூன்று வருஷத்துப் பஞ்சமோ? அல்லது உன் பகைஞரின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்று மாதச் சங்காரமோ? அல்லது மூன்றுநாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று கர்த்தர் உரைக்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான்.
13. அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் கர்த்தருடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.
14. ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள்.
15. எருசலேமையும் அழிக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினார்; ஆனாலும் அவன் அழிக்கையில் கர்த்தர் பார்த்து, அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்; கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் களத்தண்டையிலே நின்றான்.
16. தாவீது தன் கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.
17. தாவீது தேவனை நோக்கி: ஜனத்தை எண்ணச் சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவஞ்செய்தேன்; பொல்லாப்பு நடப்பித்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? என் தேவனாகிய கர்த்தாவே, வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக என்றான்.

தாவீது ஒரு பலிபீடத்தை கட்டுகிறார்:

18. அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் களத்திலேகர்த்தருக்குஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று கர்த்தருடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான்.
19. அப்படியே தாவீது கர்த்தரின் நாமத்திலே காத் சொன்ன வார்த்தையின்படியே போனான்.
20. ஒர்னான் திரும்பிப்பார்த்தான்; அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நாலு குமாரரும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளித்துக்கொண்டார்கள்; ஒர்னான் போரடித்துக்கொண்டிருந்தான்.
21. தாவீது ஒர்னானிடத்தில் வந்தபோது ஒர்னான் கவனித்துத் தாவீதைப் பார்த்து, அவன் களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைமட்டும் குனிந்து தாவீதை வணங்கினான்.
22. அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு அதை எனக்குக் கொடு; வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதைப் பெறும் விலைக்குக் கொடு என்றான்.
23. ஒர்னான் தாவீதை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் அதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி செய்வாராக; இதோ, சர்வாங்கதகனங்களுக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும், போஜனபலிக்குக் கோதுமையும் ஆகிய யாவையும் கொடுக்கிறேன் என்றான்.
24. அதற்குத் தாவீதுராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாய் வாங்கி, கர்த்தருக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதை பெறும் விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி,
25. தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து,
26. அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியில் அவனுக்கு மறுஉத்தரவு கொடுத்ததுமல்லாமல்,
27. தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்.
28. எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தர் தனக்கு உத்தரவு அருளினதைத் தாவீது அக்காலத்திலே கண்டு அங்கேதானே பலியிட்டான்.
29. மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின கர்த்தருடைய வாசஸ்தலமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது.
30. தாவீது கர்த்தருடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கக் கூடாதிருந்தது.

Related Quiz Articles